

சென்னை,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழாவின்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு 'அரோகரா' என முழக்கமிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதல்-அமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.