

திருப்பத்தூர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சதுர்த்தி விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நாள்தோறும் இரவு வாகன வீதி உலா நடைபெற்றது. மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கஜமுக சூரசம்ஹாரமும் நடந்தது.
விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் திருக்குளத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பகவிநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பின்னால் வந்த சிறிய தேரான சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக ஆண்டிற்கு ஒரு முறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று தேரோட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணி முதல் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கற்பகவிநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் கற்பகவிநாயகர் தங்கஅங்கியில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜையின்போது மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.