மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ரசாயன பொருள் - அகற்றும் பணி மும்முரம்

மண்டபம், தனுஷ்கோடி கடற்கரையில் சிறிய பாசி போன்ற வெண்ணிற ரசாயன பொருள் 2-வது நாளாக நேற்றும் கரை ஒதுங்கியது.
ராமேசுவரம்,
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கடந்த மாதம் 24-ந் தேதி நைஜீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று கொச்சி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த சில கன்டெய்னர்கள் கன்னியாகுமரி, கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஒதுங்கின. சில கன்டெய்னர்கள் நடுக்கடலிலேயே உடைந்து அதில் இருந்த பல்வேறு பொருட்கள் கடலில் மூழ்கியும், அலையின் வேகத்தால் ஆங்காங்கே கரை ஒதுங்கியும் வருகின்றன.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று முன்தினம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிறிய பாசி போன்ற வெண்ணிற ரசாயன பொருள் குவியல், குவியலாக கரை ஒதுங்கி கிடந்தது. இந்த ரசாயன பொருளுடன் கூடிய 40-க்கும் மேற்பட்ட மூடைகளும் கரை ஒதுங்கி கிடந்தன.
கடற்கரையிலும், கடலிலும் பரவி வந்த இந்த ரசாயன பொருளால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே உடனே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வலுத்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவின்பேரில் ரசாயன பொருளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.