

ஆலந்தூர்,
சென்னை மேடவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தை தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 10 நாட்களாக தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று காலை தன்னார்வலர்கள் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
இந்த வகை எழுத்துகள் கி.பி. 5-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் இடம்பெற்றிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வெட்டின் காலம், எழுத்து மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக, இதனை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.