

ஓசூர்,
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ் ஓசூர் வழியாக நேற்று அதிகாலை அத்திப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி கார் ஒன்று வந்தது.
அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்து ஆம்னி பஸ்சின் மீது மோதியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிய தொடங்கின. உடனே பஸ்சில் இருந்த 10 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கண்ணாடிகளை உடைத்து பஸ்சில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர். ஆனால் காரில் பயணம் செய்த 2 பேரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதில் 2 பேரும் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் காருக்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ஓசூரை சேர்ந்த ஷபி (வயது 29), இஸ்மாயில் (28) என தெரியவந்தது. இந்த விபத்தால் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.