

சென்னை,
தமிழக சட்டசபையில் வரும் 17-ந் தேதி (செவ்வாய்கிழமை) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் 18-ந் தேதி தாக்கல் ஆகிறது.
இது தொடர்பான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தொடர்ந்து, 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு பிறகு, பட்ஜெட்டுக்கான ஒப்புதல் அளிக்கப்படும். இதில், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025-26) பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் ரூ.5145 கோடியே 52 லட்சத்துக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, ரூ.68 கோடியே 57 லட்சம் பற்றாக்குறையாக தாக்கல் ஆனது. மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன் 62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முறை சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், புதிய அறிவிப்புகள் வெளியாக அதிகம் வாய்ப்பு இருக்கிறது.