

சென்னை,
சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் இன்று (15.10.2026) நடைபெற்றது.
இந்த பயிற்சிக் கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு), 1 முதல் 15 வரையிலான மண்டல நல அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டாக்டர். ரகுநந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டாக்டர். ரகுநந்தன் தனியார் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சியினை வழங்கினார்.
மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறிதல், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், டெங்கு காய்ச்சல் கண்டவர்கள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு I.H.I.P, HIMS மூலம் தகவல் அளித்தல் மற்றும் தகவல் அளிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவர்களிடத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டது. மாநகர நல அலுவலரால் டெங்கு காய்ச்சல் கண்டவர்கள் குறித்து அறிக்கை பெற்ற பின்பு காய்ச்சல் கண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.