

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.743.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ரெயில்வே கட்டிட அடித்தள பணிகள் முடிவுற்ற நிலையில் உள்பகுதியில் நடை மேம்பாலம் இணைப்பு, வாகன நிறுத்தும் இடம், வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று முதல் புறநகர் நடைமேடை எண் 10 மற்றும் 11-ல் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 208 ரெயில்களுக்கு பதிலாக 164 ரெயில் சேவைகள் இயக்கபப்ட்டன. ஏற்கனவே ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என இயக்கப்பட்டு வந்தன.
இனி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என்று அறிவிக்கபட்டாலும் சுமார் அரைமணி நேரத்துக்கு ஒருமுறையே ரெயில்கள் வந்தன. சுமார் 44 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள், சென்னை கடற்கரை பகுதியில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கக்கூடிய 5,6 நடை மேடைகளில் நின்று செல்ல ஏற்பாடு செயப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த நடைமேடைகளுக்கு காலையில் இருந்து தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ரெயில்களுக்கு வழிவிட்ட்டு புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் புறநகர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வழிவிடுதற்காக சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே புறநகர் ரெயில்கள் நிறுத்தப்பட்டு சிக்னல் கிடைத்த பிறகே இயக்கப்பட்டன.
இதனால் ஒவ்வொரு புறநகர் ரெயில்களும் சுமார் 40 நிமிடமாக நின்று செல்லவேண்டிய கட்டாயம் சூழல் ஏற்பட்டது. பல ரெயில்கள் சிக்னலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் வேறு தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் சமயத்தில் மேலும் தாமதம் ஆகும் நிலை உண்டாது. இதன் காரணமாக வழக்கமான பணிகளை திட்டமிட்டு ரெயிலை பிடித்த பயணிகள் பலரும் கடும் அவதிப்பட்டார்கள். சரி மாலையில் சரியாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் மாலையிலும் இதே நிலை நீடித்ததாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தநிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் 45 நாட்களுக்கு நடைமேடை மாற்றம் செய்யப்பட உள்ளது. எக்ஸ்பிரஸ், மெயில் ஆகிய பிற ரெயில்களின் வருகை, புறப்பாடு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் சேவையில் தாமதம் ஏற்படலாம் என்று ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஒத்துழைக்கவும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.