

சென்னை,
மருத்துவ பணியாளர்களின் சேவைகளை பாராட்டிய அமைச்சர் அருண்ராஜ், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம், தீபாவளி பண்டிகையின்போது எதிர்பாராத விதமாக ஏற்படும் தீக்காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் தீக்காயங்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படும் மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீபாவளியின்போது பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் வழங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருகை தந்து அங்குள்ள மருத்துவ பணியாளர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவைகளை பாராட்டிய அமைச்சர் அருண்ராஜ், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். தொடர்ந்து தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல் கூறினார்.