

சென்னை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அம்மா உணவகங்களிலும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், சமையல் உபகரண பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிபடுத்திடுமாறும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளை சீரமைப்பதற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.