ஆனி திருமஞ்சன விழா... களைகட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி திருமஞ்சன விழா... களைகட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

சிதம்பரம்,

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மாளுக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது.

அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com