சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றம் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றம் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
Published on

கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடமும் பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 20 ஆம் தேதி மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர, மற்ற மாணவ, மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதிகளில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்ததால் கட்டணம் தொடர்பான பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த மூன்று கல்லூரிகளையும் சுகாதாரத்துறைக்கு மாற்றி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனையடுத்து ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி என்பது இனி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பல் மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரியும் அரசு மருத்துவக் கல்லூரிகளாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த கல்லூரிகள் இனி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் என்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அந்த கல்லூரிகள் கொண்டு வரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் இந்த கல்லூரிகளிலும் வசூலிக்கப்படும் என்றும் அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com