

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னை வருகிறார். சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளோடு அவர் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அமலாக்கத்துறையின் தலைமை இயக்குனர் ராகுல் நவீன் சென்னைக்கு வந்து ஆலோசனை நடத்துவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.