பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் நேற்று மரணம் அடைந்தார்.
பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

சென்னை,

தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன். இவர் வெங்கடேசன்-ராணி வெங்கடேசன் தம்பதியின் மகள். வெங்கடேசன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். ராணி வெங்கடேசன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பீகாரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேசை பீலா வெங்கடேசன் திருமணம் செய்தார். ராஜேஷ் தமிழ்நாட்டின் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால், பீலா வெங்கடேசனும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறுதல் பெற்று வந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி, சுகாதாரத்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார்.

பீலா வெங்கடேசனின் மரணத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமான ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com