திருச்சி, கரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
திருச்சி, கரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
Published on

திருச்சி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

திருச்சி, கரூரில் பிரசாரம்

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் இன்று மாலை ராயனூர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com