

சென்னை,
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை சேனாய் நகரில் ரூ.62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக்கூடிய அனைத்து நவீன வசதிகளுடனான அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.மேலும், முதல் கட்டமாக பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளையும் முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்துகிறார்.
அனைத்து நடைமுறைகளையும் கைபேசி மூலம் எளிதாக மேற்கொள்ளும் வகையில் “தேர்வுக்களம்” என்ற மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை, தொடர்பாடல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள கட்டணமின்றி பயிலும் இணையதளமும் தொடங்கப்படுகிறது. அத்துடன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.3 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 3 அடுக்குகளுடன் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.