‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்த கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையே தான் போட்டியா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்த கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
Published on

பரமக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த வைரவன்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்று இரவில் தங்கினார். முன்னதாக அவரை மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பரமக்குடியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார்.

இந்நிலையில் பரமக்குடியில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் ஒருவர், “ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதை பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

ஜனநாயகன் படம் வெளியானதற்கு உதயநிதிதான் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நான் ஆதவ் அர்ஜுனா செய்திகளை படிப்பதில்லை” என்று கூறினார். திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியா என்ற கேள்விக்கு NO COMMENTS என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர்களை அவதூறு பரப்புவதாக தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “தோல்வியின் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதிமுகவின் முகமூடியை போட்டுக்கொண்டு பாஜக உள்ளே வர பார்க்கிறது. அதுதான் உண்மை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக த.வெ.க. தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி படம், 'ஜனநாயகன்'. இந்த திரைப்படத்தை கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது திரையிடுவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் 'ஜனநாயகன்' படத்தின் 5 நிமிட காட்சிகள் கடந்த 9-ந்தேதி அன்று இணையதளத்தில் வெளியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து படக்குழுவினர் மீள்வதற்குள் முழு படமும் நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com