

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் வளர்ச்சி, நிதி உரிமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தொழில், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் தமிழ்நாடு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாயை வழங்கி வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமாகும்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட வேண்டும்:
* மக்கள் தொகை அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்து, வளர்ச்சி குறியீடுகள் மற்றும் மாநிலங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு நிதி வழங்க வேண்டும்.
* கல்வித் துறையில் புதிய பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு கூடுதல் மத்திய நிதி வழங்க வேண்டும்.
* அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிக்க வேண்டும்.
* சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ, ரெயில், துறைமுகம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
* காவிரி டெல்டா பகுதிகள், வறட்சி பாதிப்பு மாவட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மண்டலங்களுக்கு தனி வேளாண் மேம்பாட்டு நிதி வழங்கப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகள், பாதுகாப்புத் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தொழில்கள் மற்றும் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
* வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு நிரந்தர பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. இழப்பீடு, மத்திய வரி பகிர்வு மற்றும் மாநிலங்களின் நிதி சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் உரிய நிதி வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்புக்கு ஏற்ப உரிய நிதியும், வளர்ச்சித் திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மாநிலத்தின் உரிமைகளையும் தேவைகளையும் உறுதியுடன் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நலன், வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக மத்திய அரசிடமிருந்து உரிய நிதியையும் திட்டங்களையும் பெற்றுத் தருவதற்கான வலுவான குரலாக இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.