2 பதக்கங்களை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தரப்பில் 496 பேர் களம் இறங்கியுள்ளனர்.
2 பதக்கங்களை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியான ஆசிய விளையாட்டு 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 11 ஆயிரம் வீரர். வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 496 பேர் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றூ நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளவேனில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

முன்னதாக, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவிலும் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவnஉக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com