

சென்னை,
சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள் ளதால், அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. அன்று முதல்-அமைச்சராக விஜய்யும், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதன் பின்னர் கூட்டணி கட்சியினர் உள்பட மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் விஜய், தனது அமைச்சரவையில் ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அமைச்சரவை கூட்டங்களில் இதை அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறார். எவர் என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களை அவர் எச்சரித்துள்ளார்.
என்றாலும், சில அமைச்சர்கள் மீது சமூகவலைத்தளங்களில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அவர்களில் சிலர் மீது முதல்-அமைச்சர் விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, மின்வெட்டு, கட்டுப்படுத்தாத விலைவாசி உயர்வு போன்றவற்றிலும் முதல்-அமைச்சர் விஜய்யை முகம்சுழிக்க வைத்துள்ளன.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவமானம் நேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்பட பல சம்பவங்கள், முதல்-அமைச்சர் விஜய்யை கோபப்படுத்தியுள்ளன. இதில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க வேண்டுமென்றால் அதிரடி நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் தள்ளப்பட்டுள்ளார். இது போன்ற சூழ்நிலைகளில் அதிரடி நடவடிக்கைகளில் ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என்பதில் அவர் விருப்பம் காட்டுகிறார்.
முன்னதாக, ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடு பற்றிய விவரங்களையும் முதல்-அமைச்சர் விஜய், உளவுத்துறை மூலமாக பட்டியலிட்டு வைத்துள்ளார். அவர்கள் யார் யாரை சந் திக்கின்றனர்? என்ன பேசுகின்றனர்? யாரால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக அவரிடம் உள்ளன.
தற்போது அரசின் முக்கிய பல திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. மேலும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே இடைத்தேர்தல் முடிந்த பிறகு சாட்டையை முதல்-அமைச்சர் விஜய் சுழற்றுவார் என்று தெரிகிறது. இது சில அமைச்சர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. என்றாலும், அமைச்சரவையில் இடம் பிடிக்க சில எம்.எல்.ஏ.க்கள் உற்சாகத்துடன் முயன்று வருகின்றனர்.