

சென்னை,
நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பே 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி அரசு தொடங்கி வைத்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு மெட்ராஸ் மாகாணத்தின் முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். 1956-ம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான்.
அதன் தொடர்ச்சியாக காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இலவச மதிய உணவு திட்டத்தை, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டமாக மாற்றினார். முதல்-அமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம் என அதற்கு பெயர் சூட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும், பள்ளி வருகையை அதிகரித்து இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் விஜய் சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சக்கரை பொங்கலை பரிமாறினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் விஜய் உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து பள்ளி வகுப்பறையை பார்வையிட்டு, மாணவர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் கலந்துரையாடினார். அப்போது வகுப்பறைக்குள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிந்த மாணவர்களை முதல்-அமைச்சர் சந்தித்தார்.. அப்போது ஒரு மாணவனின் அருகில் முதல்-அமைச்சர் விஜய் அமர்ந்தார். உடனே அந்த மாணவன் மழலை குரலில் `தண்ணி வேணும்’’ கேட்டதும் முதல்-அமைச்சர் பணியாளரிடம் இருந்து தண்ணீர் வாங்கி கொடுத்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகள் பாடிய ரைம்ஸ் பாடலுக்கு கை தட்டி அவர்களை முதல்-அமைச்சர் உற்சாகப்படுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். மாணவர்களுடன் கலந்துரையாடிய புகைப்படங்களுடன் இணைத்து, தொண்டர்கள் சமூக வலைகளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்கு உணவு பரிமாறும் புகைப்படத்துடன் இணைத்துப் “அன்றும்... இன்றும்” என பகிர்ந்து வருகின்றனர்.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க வந்த முதல்-அமைச்சர் விஜய், மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை விளக்கும் விதமாக, சாப்பிடுவதற்கு முன்பாகத் தனது கைகளை கழுவினார்.
மாணவர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் விஜய் உணவருந்தியபோது, மாணவி ஒருவர் கடவுளை வேண்டிய பின் உணவருந்த தயாரானார். அந்த சிறுமையை முதல்-அமைச்சர் விஜய் நீண்ட நேரம் கவனித்தார். சிறுமியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.