முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆந்திரா பயணம்: சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை; என்னென்ன விவகாரம்..?

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்கிறார்.
முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆந்திரா பயணம்: சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை; என்னென்ன விவகாரம்..?
Published on: 

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஆந்திரா செல்கிறார். அங்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆந்திர பிரதேச அரசு

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர பிரதேச அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கம் வரை மிகக் குறைந்த அளவில்தான் (2.251 டி.எம்.சி) தமிழகத்திற்கு நீர் கிடைத்துள்ளது.

மேலும், கோதாவரி -கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே இந்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும், அதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.

அதோடு, தமிழக எல்லையை நோக்கி பாயும் நதிகளின் குறுக்கே ஆந்திர பிரதேச அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தமிழக அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் - சந்திரபாபு நாயுடு

இந்த அம்சங்கள் குறித்து ஆந்திர பிரதேச அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் முடிவெடுத்தார். அதற்காக அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பயணம் சாத்தியப்பட்டதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல்-அமைச்சர் விஜய் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் விஜய் பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார். ஆந்திராவில் உள்ள ஞானாவரம் விமானநிலையத்திற்கு 3.30 மணிக்கு செல்கிறார்.

என்னென்ன விவகாரம்?

பின்னர் 4:15 மணிக்கு ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்கிறார். பின்னர் அவருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் கலந்து கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் அம்மாநில மந்திரிகளையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கும் இடையேயான முக்கிய நதிநீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையேயுள்ள நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள், அணை கட்டும் விவகாரங்கள் போன்றவை முக்கிய கருப்பொருளாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கனக துர்கா கோவில்

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்றிரவு 8:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com