முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்க திட்டமா?

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்க திட்டமா?
Published on: 

சென்னை,

மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது அணை

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவில் கடந்த 13-ம் தேதி நடந்த அரசு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விஜய்க்கு கடிதம்

அவரது பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதுபற்றி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. உடனடியாக அனைத்துக்கட்சி கூட் டத்தை கூட்ட வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அரசியல் கட்சித்தலைவர்களும் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'திடீர்' டெல்லி பயணம்

இந்தநிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லியில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்காக இன்று காலை விமானம் மூலம் முதல்-அமைச்சர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்த சந்திப்பின்போது, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தடுக்கவும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியாவின் புத்தகம்

மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதிய, 'பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்' என்ற நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடை பெற உள்ளது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் விஜய் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை, டெல்லியில் ஐ.டி.சி. மவுரியா என்ற நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

முக்கிய திருப்பம்

முதல்-அமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த மே 27-ந்தேதி டெல்லிக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தற்போது 2-வது முறையாக அவர் டெல்லிக்கு செல்கிறார். அங்கு மோடியை அவர் சந்திப்பாரா? என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றால், அது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் என்பதோடு அரசியலில் சில முக்கிய திருப்பங்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரும் பங்கேற்க உள்ளார். எனவே அவரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X