

சென்னை,
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் தொகுதியில் வரும் 30ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், நா.த.க. என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில், முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி, செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார் என்றும், அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் வரும் 30ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தாராபுரம் மாருதி நகர் பகுதியில் 54 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.