'முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு' - வைரலாகும் பரபரப்பு போஸ்டர்

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது.
'முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு' - வைரலாகும் பரபரப்பு போஸ்டர்
Published on

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு பெரும் கட்சிகளுக்கும் பேட்டியாக இந்த முறை தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. த.வெ.க. கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 4-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.

மேடையில் பேசிய விஜய், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று அ.தி.மு.க.வையும் நேரடியாக தாக்கிப் பேசினார்.

சட்டசபை தேர்தலுக்கான விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' எந்த வகையில் எடுபடப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இளம் இயக்குநர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாதும் அறியான்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை 2026-ல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை குறிப்பதற்காக டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றில், 'முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு' என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காட்சியில் செய்தித்தாள் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தித்தாளில், "தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தினேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com