

சென்னை,
தமிழகத்தில் அரை நூறாண்டுக்கும் மேலாக மாறி, மாறி ஆட்சி செய்து வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து, புதிதாக துவங்கப்பட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மே 10-ந்தேதி விஜய் பதவியேற்றார்.
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன்(திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், ‘முதல்-அமைச்சர் விஜய்யின் 100 நாள் பதவிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இன்று சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;-
“முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் 100 நாட்கள் பதவிக்காலம், தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள், 200 யூனிட் இலவச மின்சாரம், கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டும் அறிவிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் என பல பாராட்டத்தக்க முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்டு, இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளார்.
வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும், நமது மாநிலத்தை வளம் மிக்க மற்றும் வலிமையான தமிழ்நாடாக மாற்றுவதற்கும் தேவையான எதிர்காலக் கனவுகளுக்கு இந்த மைல்கல் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.