முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க. அரசு

செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.
முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க. அரசு
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

காலை உணவுத் திட்டம்

கடந்த தி.மு.க. ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​-அமைச்சர் மு.க.ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத்திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

த.வெ.க. அரசு

இந்​த சூழலில் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு த.வெ.க. அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தன் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள்.

பெருந்தலைவர் காமராஜர்

சமையலறை மற்றும் உபகரணங்கள் இருக்கும் பள்ளிகளில் செப்டம்பர் 17-ந்தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளும் இந்த திட்டம் தொடங்கப்படஉள்ளது. ஆக தமிழ்நாட்டில் இனி 34.36 லட்சம் மாணவர்களுக்கு பசிப்பிணி தெரியாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

சத்துணவோடு முட்டை

முன்னதாக ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இதேபோல, முதல்-அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தநேரத்தில், 1-வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுவை மிகுந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது முதல்-அமைச்சர் விஜய் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழுவிவரம் :-

Attachment
PDF
swnmp_t_20_2026
Preview
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com