

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்படுவதால் அதை குறைத்து எடைபோட முடியாது.
தற்போது, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்க தடை போன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளன.
இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் மருத்துவ நிபுணர்கள், குழுவுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.