

சென்னை,
142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கு கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார்.
மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
முதலமைச்சர் கோப்பை-2026 விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள 27,82,173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்தனர். 5 பிரிவுகளில், 38 மாவட்டங்களில், 6 மண்டலங்களில், 7 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு, 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்த பரிசுத்தொகை 38 கோடி ரூபாயாகும்.
முதலமைச்சர் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் 6,45,981 பள்ளி மாணவ, மாணவியர், 1,94,250 கல்லூரி மாணவ, மாணவியர், 1,48,314 பொதுமக்களும், 30,313 அரசு ஊழியர்கள், 17,685 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10,36,543 வீரர், வீராங்கனைகள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களை வென்ற 1,06,704 வீரர், வீராங்கனைகளுக்கு 21 கோடியே 34 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்ற 32,603 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 17 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
13,785 பள்ளி மாணவ, மாணவியர்கள், 12,854 கல்லூரி மாணவ, மாணவியர், 1,266 பொதுமக்கள், 454 அரசு ஊழியர்கள், 4,244 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 32,603 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் கோப்பை - 2026 நிறைவு விழாவில், மொத்தம் 319 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்த சென்னை மாவட்டத்திற்கான கோப்பையை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோரிடமும், 143 பதக்கங்கள் வென்று இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கான கோப்பையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. மு. வீரப்பன், இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோரிடமும், 118 பதக்கங்கள் வென்று மூன்றாம் இடம் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான கோப்பையை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோரிடமும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் வழங்கி, வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார்.
ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற பாரா பேட்மிண்டன் வீரர் நவீன் சிவக்குமார் அவர்களுக்கு 1 கோடியே 5 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பாரா தடகள வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கு 75 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ அவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமணி அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா வலுதூக்குதல் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பேபி சஹானா அவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற பாரா டேபிள் டென்னிஸ் வீரர் J.D. மதன் அவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை;
என மொத்தம் 9 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 6 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் 42 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமி மற்றும் சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்புநிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.500/-, முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.1000/- என 2,600 வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு 1.77 கோடி ரூபாய் வழங்கும் விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை வல்லுநர்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.