சாத்தான்குளம் விபத்து எதிரொலி: தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்க தலைமை செயலாளர் உத்தரவு

சாலையோர தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்ததில் 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் நெஞ்சுருக வைத்துள்ளது. இதையடுத்து சாலை ஓரங்களில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நெடுஞ்சாலை துறைக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலை மற்றும் சாலை ஓரங்களில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகள், பெரும் பள்ளங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர், சாலையின் ஓரத்தில் பள்ளங்களோ, கிணறுகளோ இருப்பது தெரியவந்தால் அதனை மூட வேண்டும் என்றும், அதுதொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

அந்த பலகைகளில், இந்த பகுதிகளில் பள்ளம் அல்லது கிணறு இருக்கிறது என்று எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளங்கள், கிணறுகள் குறித்து முழுமையான ஆய்வு செய்த பிறகு, கிணறுகளை பாதுகாப்பாக மூடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கிணற்றை சுற்றி பெரிய அளவில் தடுப்புச்சுவரை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், கிணறு இருக்கும் இடத்தில் சாலை ஓரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையோர கிணறுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com