

சென்னை,
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் ‘கேக்’ வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பேருக்கு கேக் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து வருகிற 10-ந்தேதிக்குள் விற்பனையாளர்கள் 38 மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்க இருக்கிறார்கள்.
அதே நாளுக்குள் பாடநூல் கழகம் மூலம் வாழ்த்து அட்டைகள் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்துவிடும். தொடர்ந்து வருகிற 11, 12-ந்தேதிகளில் கிடங்குகளிலிருந்து பள்ளிகளுக்கு கேக்குகள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்லப்படும். இதையடுத்து வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயனாளிகள் அனைவருக்கும் கேக்குகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டைகளுடன் கேக்கும் வழங்க வேண்டும்.
உணவு ஒவ்வாமை அல்லது உணவுக்கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்ட றிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும். மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும். வினியோகம் ஒழுங்காகவும், சமமாகவும் நடைபெற வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்யவேண்டும். இத்திட்டத்தை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, இது சார்ந்த பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.