

மதுரை,
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் இன்று முதல் நாளைமறுநாள் (புதன்கிழமை) வரை நடக்கிறது. இதனையொட்டி, மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகர பகுதிகளில், இன்று மினி வேன் போன்ற சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில், வழக்கம்போல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து செல்லலாம். ஆனால், இரவு 10 முணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி வரை நான்கு ஆவணி மூலவீதிகளிலும் எந்த ஒரு சரக்கு வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை.
இதுபோல மாசி வீதிகளில், கீழமாசி வீதியில் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் எந்த ஒரு சரக்கு வாகனத்திற்கும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சரக்கு வாக னங்கள் வந்து செல்லலாம். இது தவிர, நான்கு ஆவணி மூல வீதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை பொதுமக்களின் எந்த ஒரு வாகனமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
மீனாட்சி அம்மன் தேரோட்டத்தையொட்டி, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளிலும் நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் தேரோட்டம் முடியும் வரை இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த ஒரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. நாளை மறுநாள் பகல் முழுவதும் கீழமாசி வீதி, கீழமாரட் வீதியில் எந்த ஒரு வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
தேரோட்டத்தைக் காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நான்கு மாரட் வீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்விதமான இடையூறுமின்றி நிறுத்திக்கொள்ளலாம். வாகன நிறுத்தத்தை பொறுத்தமட்டில், இன்று இரவு 11 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தம் செய்யவோ அனுமதி கிடையாது. மேலும், வாகனங்களை நாளை காலை 6 மணி முதல் நிறுத்துவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மஞ்சள் நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள், மேல ஆவணி மூல வீதி பகுதியி லும், இளஞ்சிவப்பு (ரோஸ்) நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள், வடக்கு ஆவணி மூல வீதி பகுதிகளிலும், நீல நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூல வீதி பகுதிகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும். கீழ ஆவணி மூல வீதயில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
இதுபோல, திருக்கல்யாணத்திற்கு வருபவர்களில், கார், இருசக்கர வாகன அனுமதி சீட்டு இல்லாதவர்கள், தங்களது வாகனங்களை கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிறுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.