திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கனரக வாகனங்களுக்கு தடை

சித்ரா பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு சுமார் 8.53 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கனரக வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கார், சிறிய ரக வாகனங்கள், அரசு பஸ்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளும் போளூர் புறவழிச் சாலையில், செங்கம், கலசப்பாக்கம் உள்ளிட்ட மாற்றுச் சாலைகளின் வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.






