சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலையில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. சித்ரா பவுர்ணமிக்கு இந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் 6 பிரிவுகளாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திருவண்ணாமலைக்கு வரக்கூடிய ஒன்பது பிரதான சாலைகளில் 20 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.