

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குபின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் சித்ரா பவுர்ணமியின் போதும், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவில் தொடங்கி மறுநாள் மே மாதம் 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் நிறைவு பெறுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுதல் சிறப்பு ரெயில்கள்
வழக்கமாக திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் அவர்களின் பகுதிகளுக்கு திரும்பி செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி செல்ல ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வருவதற்கும், கிரிவலம் முடித்து திரும்பி செல்லும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்க குறிப்பாக திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.