திருச்செந்தூர் கோவிலில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல்

கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.
திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவன் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி-தெய்வானையுடனும், சுவாமி ஜெயந்திநாதர் ஆகியோர் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் வெள்ளி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த நிலையில், 7-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதமாகியது. மேலும் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






