புதுக்கோட்டையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன் பலி

பின்பக்க படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்த மாணவன் புவியரசன் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன் பலி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலூகா, வ.உ.சி நகரைச்சேர்ந்தவர் அழகர். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் புவியரசன் (வயது 15). இவர் அருகில் வேங்கடாகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

தினமும் தனது வீட்டில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஒருசில சமயங்களில் அவரது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் புவியரசன் பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கி காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டார்.

பின்னர் அவர் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாணவர் புவியரசன் பின்பக்க படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அந்த பஸ் ஆலங்குடியை அடுத்த மங்களாபுரம் அருகே குப்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து புவியரசன் படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புவியரசுவை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் புவியரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் புவியரசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் பள்ளி நேரத்தில் அரசு பஸ்கள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

காலையில் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு பள்ளிக்கு சென்ற மகன் இறந்தது குறித்த அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதவாறு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com