முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை: ஜோதிடர் ராதன் பண்டிட் பரபரப்பு பேட்டி

ஒரு ஜோதிடர் என்பதற்காக என்னை அவர் அங்கீகரிக்கவில்லை.

முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை:  ஜோதிடர் ராதன் பண்டிட் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராவார். த.வெ.க. கட்சியில் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா? அவர் எப்படி அரசியல் ஆலோசனைகளை வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை நியமித்து பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என கூறினார்.

ஒரு ஜோதிடர் என்பதற்காக என்னை அவர் அங்கீகரிக்கவில்லை. தந்தை, மகன் போல.. நண்பர்கள் போல எங்களுக்கு இடையே ஏதோ ஒரு பிணைப்பு. அதனால் அவர் அன்புக்குரியவராக இருக்கிறேன். அவ்வளவுதான் என்றார்.

தொடர்ந்து அவர், தான் அரசனாக முடியாது என்று கூறிய ஜோதிடரை கண்ணகி கோவில் கட்ட அழைத்து போனான் சேரன் செங்குட்டுவன். 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே ஜோதிடம் சபை ஏறியிருக்கிறது. அப்போ சேரன் செங்குட்டுவன் முட்டாள் என்பீர்களா? ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை சார். அது ஒரு கணிதம் என்றார்.

முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. நான் சொல்வது பிடித்ததால் அவர் கேட்டார். நம்பி கேட்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் என்றும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com