உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

நலிவடைந்த குடும்பங்களைப் பாதுகாப்பதற்காகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013-ல் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (6.7.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இச்சட்ட வரைவு, 2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் மூலமாகத் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு உள்-வகைப்பாடுகளுக்கிடையே நிலவும் சமத்துவமின்மையைக் களைவதும், ஊட்டச்சத்துத் தேவைகளுக்கேற்ப உணவுப் பொருள் உரிமைகளை மிகச் சரியாக ஒழுங்குபடுத்துவதுமே இத்திருத்தத்தின் நோக்கம் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குச் சென்றடையும் உணவு தானியங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்குமெனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன என்றும், இதன்மூலம் 69,26,983 ஏழைப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்றும், இக்குடும்பங்கள், மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள தகுதி வழிகாட்டுதல்களின்படி, சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், குறிப்பாக, விதவைகள் மாற்றுத்திறனாளிகள், வயதான மாற்றுத்திறனாளிகள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு நிலையான வருமானம் இல்லாத அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் தலைமையில் செயல்படும் குடும்பங்கள், பழங்குடியினக் குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர் என்றும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், உறுதி அளிக்கப்பட்ட, நிபந்தனையற்ற உரிமைகளின் மூலம் இத்தகைய நலிவடைந்த குடும்பங்களைப் பாதுகாப்பதற்காகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மிக வறுமையில் வாடும் ஏழை மக்களின் இறுதிச் சட்டப் பாதுகாப்பிற்கான ஒரு நடவடிக்கையாகவே நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது என்றும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு குடும்பத்திற்கும் போதிய அளவில் உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடவோ அல்லது பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே, இதன் உரிமைகள் திட்டமிட்டே எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன என்றும், இத்தகைய உரிமையை, தலா ஒரு நபருக்கான பங்காக மாற்றி, குடும்ப அளவில் அதற்கு உச்சவரம்பு விதிப்பது, குறைந்த எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலங்களை, குறிப்பாக, மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையுமென்றும் முதல்-அமைச்சர்தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது, தமிழ்நாட்டில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்காக அரிசி, கோதுமை / கேழ்வரகு போன்ற 65,261டன் (MT) உணவு தானியங்கள் மாதந்தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றும், இந்த ஒட்டுமொத்த அளவும் மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் நடைமுறைக்குவரும் நேர்வில், ஒரு நபருக்கு 7 கிலோ கிராம் என்ற விதிமுறையின்கீழ் கணக்கிடப்பட்டு, மத்திய அரசின் மூலமாக வழங்கப்படுகிற, இந்த விநியோக அளவு சுமார் 42,040 டன்னாகக் குறைந்துவிடுமென்றும், இது சமூகத்தின் சுமார் எழுபது லட்சம் ஏழை, நலிவடைந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்குமென்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பசியற்ற நிலையை உருவாக்குவதிலும், தன் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குவதிலும் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கிணங்க, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஒரு வலுவான மற்றும் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தை (PDS) செயல்படுத்தி வருவதுடன், தேவைப்படும் இடங்களிலெல்லாம் மத்திய அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கும் கூடுதலாக உணவுப் பொருள் உரிமைகளை வழங்கிவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பெரும்பாலும் அரிசியை முதன்மை உணவாகக் கொண்ட ஒரு மாநிலமாகும் என்றும், இங்குள்ள ஒட்டுமொத்த மக்களும் காலை அல்லது இரவு சிற்றுண்டியாக இட்லி, தோசை, பொங்கல் என்றும், மதிய உணவாக அரிசி சாதத்தையே பெரும்பான்மையாக உட்கொள்கின்றனர் என்றும், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, அவர்களின் அன்றாட மூன்று வேளை உணவிற்கும் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக விளங்குவதோடு, வெளிச்சந்தையில் இருந்து வேறு எந்தவொரு உணவுப் பொருளினாலும் அதனை ஈடு செய்ய முடியாது என்றும் அவ்வாறு மாற்ற நேரிட்டால், அது அவர்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தி, அவர்களை வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பசியின் பிடிக்கு ஆட்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 5 உறுப்பினர்களுக்கும் குறைவான குடும்ப அளவைக் கொண்ட AAY குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 15.75 லட்சமாகவும், 58.51 லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட தமிழ்நாடு மட்டுமல்லாது, அத்தகைய பிற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படையும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டால், மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சுமார் எழுபது லட்சம் குடிமக்களின் உணவு பாதுகாப்பு சீர்குலையக் கூடுமென்பதால், 2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், இச்சட்டம் இயற்றப்பட்ட நாள் முதல் நடைமுறையில் இருப்பது போல, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், தற்போதைய நடைமுறையான மாதத்திற்கு முப்பத்தைந்து கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கும் உரிமையைத் தொடர வேண்டுமென்றும் மத்திய அரசை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, சுமார் எழுபது லட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்குகந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று தான் நம்புவதாக முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com