சி.எம்.டி.ஏ. திவால் நிலைக்கு காரணம் என்ன? – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.
அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

நிதியுதவி

ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.

நிதி நெருக்கடி

ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான் ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாக செலவுகள் ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.

ஊழல்

நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம் வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழக அரசு

சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன? அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com