எம்.பி.ஏ. தேர்வுக்காக தாட்கோ நடத்தும் பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்

எம்.பி.ஏ. தேர்வுக்காக தாட்கோ நடத்தும் பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்
Published on

இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு எழுத தாட்கோ மூலம் அளிக்கப்படும் பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிக்க வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொது நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளும், விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தல் மற்றும் தேர்வு இணையதளம் வழியாகவே நடைபெறும்.

கல்வி கடன்

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல், எழுத்துத் திறன் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

எம்.பி.ஏ. படிப்பில் சேர்க்கை கிடைத்த பின் படிப்பிற்கு ஆகும் சுமார் ரூ.25 லட்சம் செலவுத்தொகை தாட்கோ அல்லது வங்கிகள் மூலம் கல்வி கடனாக பெற்று தரப்படும்.

இந்த பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி வசதி தாட்கோ மூலம் செய்து தரப்படும். மேற்கண்ட தேர்வுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு தர்மபுரி விருபாட்சிபுரம் சாலை விநாயகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com