மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து

கச்சத்தீவு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கூட மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் இருந்து தடைகாலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியில் இருந்து வழக்கம்போல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் தடைகாலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 41 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களது 9 படகுகளை பறிமுதல் செய்துள்ளது.

அவ்வப்போது மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கூட மீன்பிடிக்க செல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரியும் அளவுக்குள்ள கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று கைதாவதை தடுக்கும் வகையில் மண்டபம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 ரோந்து கப்பல்கள் தனுஷ்கோடி முதல் ராமேசுவரம், மண்டபம் வரையிலான இந்திய கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com