சென்னையில் ரூ.15 கோடி மதிப்புள்ள ‘கொகைன்' போதைப்பொருள் கடத்தல்: கென்யா நாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளை 70 கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கொகைன் போதைப்பொருள் கடத்தல்
Published on
Updated on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ரூ.15 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளை 70 கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ரகசிய தகவல்

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியா நாட்டின் வழியாக அதிகளவு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக கவனித்தனர்.

கென்யா நாட்டு பெண்

அந்த விமானத்தில் சுமார் 28 வயதுடைய கென்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கென்யாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் வலுத்த அதிகாரிகள் அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

வயிற்றில் கேப்சூல்கள்

இதையடுத்து அவரது உடைமைகள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் எந்தவிதமான போதைப்பொருளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ சிக்கவில்லை. இதையடுத்து அந்த இளம்பெண்ணை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டபோது, வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

ரூ.15 கோடி மதிப்பு

இதைத்தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் அவரது வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்கள் ஒன்றன்பின் ஒன்றாக 70 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அந்த கேப்சூல்களை உடைத்துப் பரிசோதித்தபோது, அவற்றில் 850 கிராம் உயர்தர கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.15 கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

இதையடுத்து கென்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளையும் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இளம்பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இந்த கொகைன் போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க வந்தார்? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com