

கோவை மாவட்டம் - சிங்காநல்லூர், ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள கல்லூரி மாணவியருக்கான சமூகநீதி விடுதி தொடர்பாக மாணவிகள் அளித்த புகார் குறித்து வெளியான செய்தியை தொடர்ந்து, கடந்த 28.05.26 அன்று விடுதி மாணவிகளிடம் வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டறிந்து, விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக உறுதி அளித்திருந்தேன்.
இன்று துறை ரீதியான ஆய்வுக்காக கோவை வந்த நிலையில், முதல் நிகழ்வாக ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்ததில், தரமான உணவை உறுதி செய்ய வேண்டும், விடுதியிலிருந்து கல்லூரிக்கு செல்ல பேருந்து வசதி, கல்லூரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும், உடல்நலம் குன்றும் மாணவிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாணவிகள் விடுதி அருகிலேயே பேருந்தை நிறுத்தி ஏற்றுவதற்கும், புகாருக்குள்ளான டாஸ்மாக் கடையை மூடவும், வாரம் ஒருமுறை விடுதிக்கு மருத்துவர் வந்து செல்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடமும், துறை அதிகாரிகளிடமும் அறிவுறுத்தினேன்.
இதனை தொடர்ந்து, விடுதிகளுக்கு உணவு வழங்கும் சமையலக்கு (Centralized Kitchen) நேரில் சென்று ஆய்வு செய்தேன். உணவு தயாரிக்கும் இடம், பாத்திரங்கள், காய்கறிகள் மற்றும் மூல பொருட்கள் வைக்கும் அறைகளை பார்வையிட்டு, அதன் ஒப்பந்ததாரரிடம் மாணவிகள் அளித்த புகார் மீதான விவரங்களை குறிப்பிட்டு விளக்கம் கேட்டேன்.
உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இந்நிகழ்வுகளின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் மற்றும் சமூக நீதித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.