கோவை உக்கடம் மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

கோவை உக்கடம் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை உக்கடம் மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
Published on

கோவை,

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள 2 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நேரம் பிடித்தது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ரூ.482 கோடியில் 2 கட்டங்களாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதன் காரணமாக இந்த பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது.

இதில் சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறவும், இறங்கவும் வசதியாக இறங்குதளம், ஏறுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மேம்பாலம் இறங்கும் சுங்கம் பைபாஸ் சாலையில் மட்டும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று முதல் உக்கடம் மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து மேம்பாலத்திற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுங்கத்தில் இருந்து பொள்ளாச்சி, குனியமுத்தூர், சுந்தராபுரம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறி பயணித்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. தற்போது மேம்பாலம் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் பயண நேரம் 4 நிமிடமாக குறைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com