

திருவண்ணாமலை,
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையை தூய்மைப்படுத்தும் மற்றும் "பிளாஸ்டிக் இல்லா தூய்மை திருவண்ணாமலை" திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலையில் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவல பாதையில் வலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கிரிவல பாதையில் சேரும் குப்பைகளை அகற்றி, பிளாஸ்டிக் இல்லாத பசுமை திருவண்ணாமலையை உருவாக்கும் நோக்கில் இந்த தூய்மைத் திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தூய்மை பணியில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிரிவலப் பாதை முழுவதும் தூய்மை பணிகளை திறம்பட மேற்கொள்வதற்காக, வந்திருந்த தன்னார்வலர்கள் 7 சிறப்பு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் இதர கழிவுகளை முழு வீச்சில் அகற்றி வருகின்றனர்.
கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.