ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்-மாணவி பலி: கடலில் குளித்து 'ரீல்ஸ்' எடுத்தபோது சோகம்

எண்ணூர் பகுதியில் கடற்கரைக்கு சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களில் 3 பேர் கடலில் குளித்தபோது, மற்ற 2 பேர் கரையில் நின்றபடி அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்'க்காக செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், மாணவி பலி
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்-மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் புழல் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பலராமன் மகள் கிருத்திகா(21). இவரும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அதே கல்லூரியில் படிக்கும் மேலும் 3 சக மாணவ, மாணவிகள் என மொத்தம் 5 பேர் எண்ணூர் ராமகிருஷ்ணாநகர் கடற்கரைக்கு வந்தனர்.

ராட்சத அலையில் சிக்கி பலி

பின்னர் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அவர்களது நண்பர் என 3 பேர் கடலில் குளித்தனர். மற்ற 2 பேரும் கரையில் நின்றபடி, அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்' போடுவதற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை, கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் 3 பேரும் கூச்சலிட்டனர். அங்கு மீன்பிடி வலைகளை சீரமைத்து கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து போராடி, கிருத்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடல் கரை ஒதுங்கியது

இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மாயமான ஆகாசை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடி வந்தனர். இதற்கிடையில் ஆகாஷ் உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com