வண்டலூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு

வண்டலூர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
வண்டலூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
Published on

தவறி விழுந்தார்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சஞ்சய் (வயது 18). கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று காலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து திருப்போரூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் சஞ்சய் நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார். பஸ் வண்டலூர் உயிரியல் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க படிக்கட்டில் தொங்கி பயணம் செய்து கொண்டிருந்த சஞ்சய் தவறி கீழே விழுந்தார்.

சாவு

இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சய் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com