திருமழிசையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
டெங்கு
Published on: 

திருமழிசை,

திருமழிசையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 18 வயது மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல்

திருமழிசை, காவல்சேரி சாலை, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் எட்வின் சாமுவேல் ராஜா. இவரது மகன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் (18). இவர் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ரெமோ கிறிஸ்டோபர் எட்வினுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருமழிசையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

திருமழிசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், குப்பைகளை முறையாக அகற்றவும், கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவ முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X