

நெல்லை,
அம்பையில் செல்போன் பேசியபடி பெட்ரோல் போட்ட கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் துரைராம் (வயது 20). இவர் அம்பையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், இவர் பகுதி நேரமாக, அம்பை- பாபநாசம் மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் நூற்பாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவில் துரைராம் வழக்கம் போல் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தார். அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் வேல்முருகன் (18) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து ரூ.50-க்கு பெட்ரோல் போடுமாறு கூறினார். அப்போது துரைராமின் செல்போனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்ததால், அவர் செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டதாக கூறப்படுகிறது.
இதனை வேல்முருகன் கண்டித்து அவதூறாக பேசினார். இதற்கு துரைராம் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்முருகனை அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே அவர் அங்கிருந்து ஆவேசமாக புறப்பட்டு சென்றார்.
பின்னர் அவர் சிறிதுநேரம் கழித்து தனது நண்பர்களான அடையகருங்குளத்தைச் சேர்ந்த சதீஷ், அகஸ்தியர்பட்டி ரவிராம் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திகேய ராஜன் (18) ஆகியோருடன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்குக்கு வந்தார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து துரைராமை சரமாரியாக தாக்கினர்.
அங்கிருந்து துரை ராம் தப்பி ஓட முயன்றார். அப்போது சதீஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் துரைராமை வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல், பெட்ரோல் பங்கில் இருந்த பூந்தொட்டி, கார்டு பேமெண்ட் மிஷின் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டு தப்பிச் சென்றது. இதில் தலையில் காயமடைந்த துரைராமை அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், கார்த்திகேய ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சதீசை வலை வீசி தேடி வருகின்றனர். அம்பையில் செல்போன் பேசியபடி பெட்ரோல் போட்ட கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.